Saturday, December 26, 2009

சுமைதாங்கி

சுழியம் ஒன்று என கணிப்பொறி மொழிப்பேசி
சொந்த தாய் மொழியை மறந்துப்போனேன்
சுற்றம் ஏதுமில்லா உலகில் வாழப்பழகி
சுய முகவரியென்பதை தொலைத்துவிட்டேன்
உறவுகள் அங்கே மகிழ்ந்திருக்க
இங்கே தனியாய் உணர்வுகளை அடக்கி
இயந்திரமாய் மாறிப்போனேன்.......
பணம் எனக்கு பிரதானமில்லை தான்
கிழிந்த சட்டையைத் தைத்துப்போடும்
தந்தை இல்லா விட்டால்
ஒண்டுக்குடித்தனத்தில் உழைத்து
ஓடாய்ப்போன தாயில்லாவிட்டால்
கண்ணில் கனவுகளோடு காத்திருக்கும்
சகோதர சகோதரி இல்லாவிட்டால்
பணம் என்றும் மகிழ்ச்சியைத் தடுக்காதிருக்க தான்
விழித்திருக்கும் உலகிற்காக
உறங்கிக்கொண்டிருக்கும் உலகத்தில்
உறங்காமல் உழைத்துக்கொண்டிருக்கிறேன்
வானவில்லாய் மாறப்போகும் என் பந்தங்களின்
நாளைய விடியலுக்காக.........